--- --:--:-- --

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 3680 பேருக்கு தொற்று உறுதி… 64 பேர் உயிரிழப்பு.. சென்னையில் இன்றும் குறைந்தது பாதிப்பு

896

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று பாதிப்பு மேலும் குறைந்து 1,205 ஆக பதிவான நிலையில் தென் மாவட்டங்களில் அதிகமாகவே தொற்று உறுதியாகியுள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று தமிழகத்தில் 3680 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261ஆக உயர்ந்துள்ளது.

 

இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டோரை விட அதிகமாகி 4,163 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 82,324ஆக உயர்ந்துள்ளது.

 

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று மேலும் 64 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,829 ஆக உயர்ந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்றும் நேற்றை (1216) விட சற்று குறைந்து 1205 ஆகியுள்ளது. அடுத்தபடியாக செங்கல்பட்டு 242 , திருவள்ளூர் 219 என பதிவான நிலையில், தென் மாவட்டங்களில் மதுரை 192, தூத்துக்குடி 191, நெல்லை 141, விருதுநகர் 143, குமரி 105 என தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது. சேலத்தில் இன்றும் பாதிப்பு 100ஐ கடந்து 125 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon