--- --:--:-- --

திருமணமான 2 மாதங்களில் பெண் உயிரிழப்பு..! காரணம் பெற்றோர் என குறுஞ்செய்தி ..!

4

திருமணமான 2 மாதத்தில் புதுமணப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது பெற்றோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாதர் சங்கத்திற்கு அந்தப் பெண் குறுஞ்செய்தி அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த 23 வயது செந்தாரைக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் உத்திரமேரூரில் உள்ள தாய் வீட்டில் செந்தாரை குளியலறை செல்லும் வழியில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறி உடல் அடக்கம் செய்ய அவசரமாக ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தாரையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணமான இரண்டே மாதங்களில் இறந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.

 

திருமணத்திற்கு முன்பு செந்தாரை ஒரு நபரை காதலித்து வந்ததாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் செந்தாரையை தாங்கள் நிச்சயம் செய்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது. சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட செந்தாரை வீட்டை விட்டு வெளியே செல்ல தடுக்கப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

உயிரிழப்பதற்கு முன்பு பெற்றோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக செந்தாரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். தன்னை மீட்டுச் செல்லுமாறும், தான் இறந்தால் பெற்றோர் பாலாஜி ஜெயந்தி தான் அதற்கு காரணம் என்றும் அவர் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். உடற்கூறு ஆய்வு அடிப்படையில் கொலையா? தற்கொலையா ? என்று தகவல் தெரியும் என்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon