செந்தில் பாலாஜி அறிக்கைக்கு அமைச்சர் தங்கமணியின் காட்டமான பதில்..!
மின் கட்டண நிர்ணயம் குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு இருப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்திருக்கிறார். கொரொனா காலத்தில் தமிழகத்தில் பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கடுமையாக விமர்சனம் செய்து திமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாக செந்தில் பாலாஜியை வைத்து திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கை உண்மைக்கு மாறானது என்றும் திமுக தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
யாரை திருப்திப்படுத்த செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே என்று கூறியிருக்கும் அமைச்சர் தங்கமணி , கூடுதல் கட்டணம் எனில் அதற்காக முறையீடு செய்து நியாயம் பெறுவதற்கு வழிமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தவறு இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான சட்ட முறையீடு செய்யவும் மின் பயனீட்டாளர்களுக்கு உரிமை உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணி வழங்கப் பணம் பெற்றுக் கொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் பெற்றிருக்கும் செந்தில்பாலாஜிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று தங்கமணி காட்டமாக பதில் அளித்துள்ளார்.







