கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 7 வயது சிறுவன் உட்பட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி..!
சிகிச்சைக்காக வந்த 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உள்ளிட்ட 3 பேருக்கு கொரானா தொற்று உறுதி.பெரியநாயக்கன்பாளையம் கே.ஆர். மருத்துவமனை தற்காலிகமாக மூடல் !!!
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கே.ஆர்.மருத்துவமனையில் இடிகரையைச் சேர்ந்த 50 வயது பெண் கடந்த 4 நாட்களுக்கு முன் வயிற்றுவலி சிகிச்சைக்காக வந்துள்ளார்.அவரை உள்நோயாளியாக அனுமதித்த மருத்துவமனை நிர்வாகத்தினர், அவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவில் அந்த பெண்ணிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

மேலும்,காய்ச்சல் பாதிப்புடன் வீரபாண்டி பிரிவைச் சேர்ந்த 55 வயது முதியவர் மற்றும் சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் உள்ளிட்ட 2 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் தொற்று உறுதியானதால் அவர்களும் சிகிச்சைக்காக கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஒரே மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சுகாதரத்துறையின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனை முழுவதும் கிரிமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.







