--- --:--:-- --

உலகளவில் கொரோனா பாதிப்பு 1 கோடி ஆனது.. உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்தது… இந்தியாவில் ஒரே நாளில் 20,131 பேருக்கு தொற்று!!

st

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு 20,131 ஆன நிலையில் மொத்த பாதிப்பு 5, 29,577 ஆகவும், ஒரே நாளில் 414 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிழைப்பும் 16,103 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்தாண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவின் வூகான் மாகாணத்தை துவம்சம் செய்த கொரோனா வைரஸ், அங்கு மட்டுமே மையம் கொண்டு கொத்து கொத்தாக உயிர்களை பலிகொண்டது. அங்கு 8 ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததை உலக நாடுகள் வெறுமனே வேடிக்கை பார்த்தன. சீனாவுக்கு மட்டுமே வந்த வைரஸ் என்பது போல பிற நாடுகள் சுதாரிக்காமல் அஜாக்ரதையாக இருந்ததன் விளைவு, இன்று ஒட்டுமொத்த உலக சமுதாயமே கதறும் நிலைக்கு வந்து விட்டது.

 

சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அடுத்து, அமெரிக்காவுக்கும் அசுர வேகத்தில் படையெடுத்து சின்னாபின்னமாக்கி உயிர்களை காவு வாங்கியது. தொடர்ந்து இந்தியா,ரஷ்யா மற்றும் பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி உலகின் 213 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது.

 

இந்த நாடுகளில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் வேகமெடுக்கத் தொடங்கிய வைரஸ் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை மளமளவென கூட்டிக் கொண்டே சென்று இப்போது உச்சத்தில் உள்ளது கொரோனாவின் கொடுங்கோலாட்டம்.

கொரோனா பாதிப்பு முதலில் லட்சங்களை எட்டியதை பெரிதாக நினைத்தோம். அடுத்தடுத்து மில்லியன் கணக்கில் எகிறிய நிலையில் கடந்த 4 மாதங்களில் ஒரு கோடி பாதிப்பு என்ற எண்ணிக்கையை இன்று கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி உலகின் மொத்த கொரோனா பாதிப்பு ஒரு கோடியே 81 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது.

 

மொத்த உயிரிழப்பும் 5 லட்சத்தை கடந்து 5,01,298 ஆகியுள்ளது. இதன்படி பாதிக்கப் பட்டோரில் இறப்பு விகிதம் சராசரியாக 5 என உயர்ந்து வருகிறது. இதில் உலகின் மொத்த பாதிப்பு (25,96,537) மற்றும் உயிரிழப்பில் (I, 28,152) கால்வாசி அமெரிக்காவில் மட்டுமே நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

மோசமான பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. அமெரிக்காவில் நிகழ்ந்த பாதிப்பில் சரிபாதி அளவுக்கு பிரேசிலில் 13 லட்சத்து 15,941 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பும் 57 ஆயிரத்து 103 ஆக உயர்ந்து தற்போது அங்கு கொரோனா ஆட்டம் பேயாட்டம் போடுவதால் பாதிப்பு மோசமான நிலையில் உள்ளது.

 

உலக அளவில் மொத்த பாதிப்பில் 3-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. ரஷ்யாவில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 646 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அங்கு உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டு 8969 ஆக மட்டுமே உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக 4 – வது இடத்தில் இந்தியா உள்ளது .

 

இந்தியாவில் 5, 29,577 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 16,103 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 , 131 பேர் பாதிக்கப்பட்டு புதிய உச்சத்தை எட்டிய நிலையில், இந்தியாவில் வரும் நாட்களில் பாதிப்பு மேலும் உச்சத்தை எட்டும் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon