கொரொனாவை விட கொடிய காக்கிகள்!? சாத்தான்குளத்தில் “இரண்டு சாத்தான்களின் அடங்காத ஆட்டம்…!” குடிமக்கள் உயிரை குடிக்க அதிகாரம் தந்ததா சட்டம்?
சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறியுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் குற்றமிழைத்த காக்கிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ், 31; அவரது தந்தை ஜெயராஜ் 55. கடந்த 20ஆம் தேதி இரவு, ரோந்து சென்ற சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் (சாத்தான்) மற்றும் காக்கிகள், ஊரடங்கு விதிகளை மீறிவிட்டதாகக்கூறி, இருவரையும் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையின்போது, தந்தை- மகன் இருவரையும் காக்கிகள், குறிப்பாக எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், (சாத்தான்) பாலகிருஷ்ணன் (சாத்தான்) மற்றும் காக்கிகள் முத்துராஜ், முருகன் ஆகியோர் காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். அதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காக்கிகள் கட்டவிழ்த்துவிட்ட கண்மூடித்தனமான தாக்குதலால்தான் இருவரும் மரணமடைந்ததாகக்கூறி, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அத்துடன், படுகொலைக்கு காரணமான காக்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களை சிறையில் தள்ள வேண்டுமென்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும், சமூகவலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
குடிமகன்களுக்கு பாதுகாப்பு தருவதுதான் காவல்துறையினரின் கடமை; பொதுமக்களை ஸ்டேஷனில் வைத்து தாக்கி, உயிரை பறிக்கும் அதிகாரத்தை காக்கிகளுக்கு யார் தந்தது? அத்தகைய அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படாத நிலையில், எவ்வாறு போலீசாரில் சிலர் இதுபோல் அத்துமீறுகின்றனர் என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் இதுபோல் காக்களின் விசாரணையின்போது அல்லது சிறையில் இருக்கும்போது கைதிகள் மரணமடைவது என்பது, அதிகரித்து வருகிறது. இதில் தொடர்புடைய காக்கிகள் மீது பெயரளவுக்கு இடமாற்றம் என்ற கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்கின்றனர்; சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை; நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரப்படுவதில்லை.

இதனால் காக்கிகளின் அராஜகம் என்பது தொடர்கதையாகவே உள்ளது. பாதிக்கப்படும் நபருக்கு அரசியல் அல்லது வலுவான சமூகப்பின்னணி இருந்தால், அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மற்றபடி அப்பாவி ஏழைகளுக்கு, சாமானியனுக்கு நடக்கும் இத்தகைய அநியாயங்கள், லாக்-அப்புக்குள்ளேயே அடைக்கப்பட்டுவிடுகின்றன.
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த விவகாரம் நல்லவேளை வெளிச்சத்துக்கு வந்தது; இந்திய அளவில் கவனத்தை ஈர்த்து, காக்கிகளின் இன்னொரு முகத்தை காட்டி, அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் தவறிழைத்த காக்கிகள் தப்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், சாத்தான்குளம் விவகாரத்தில் காக்கிகளை காப்பாற்ற, சத்தம் போடாமல் முயற்சி நடக்கிறதோ என்று, சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்பி உுள்ளனர். காக்கிகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலத்த காயமடைந்த இருவரையும் முறையாக பரிசோதனை செய்யாமல், அரசு மருத்துவர் எப்படி ரிமாண்டுக்கு அனுப்ப முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்நிலையை பரிசோதனை செய்த விவகாரத்தில், மருத்துவர்களுக்கு போலீசார் நெருக்கடி தந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. காக்கிகள் கொடுத்த நெருக்கடியால்தான் மருத்துவர்கள் தங்கள் பணியைச் சரிவரச் செய்யவில்லை; மருத்துவர்களுக்கு நெருக்கடி தந்து, தாங்கள் விரும்பியபடி காக்கிகள் மருத்துவச்சான்று பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, சாத்தான்குளம் அரசு மருத்துவமனை பெண் மருத்துவர் ஒருவரிடம் காக்கி, இருவருக்கும் உடலில் காயங்கள் இல்லை என்று சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்தினார்களாம். அந்த மருத்துவர், இதற்கு சம்மதிக்கவில்லை; அதனால், மருத்துவச்சான்று பெறுவதில் பலமணி நேரம் தாமதமானது;
கடைசியில் தொடர்நெருக்கடி ஏற்படுத்தி, காக்கிகள் கேட்டவாறே மருத்துவச்சான்றிதழ் வழங்கப்பட்டதாக, பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், சாத்தான்குளம் விவகாரத்தில் தேவையில்லாமல் மருத்துவர்களுக்கும் அவப்பெயர் உண்டாவதாக, அவர்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்.

இதிலிருந்து ஒன்று மட்டும் தெரிகிறது, அதாவது பூதாகரமாக வெடித்துள்ள இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட காக்கிகளை காப்பாற்ற ரகசிய வேலைகள் நடக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன், வழக்கை திசை திருப்பவும் சமூக வலைதளங்களில் காக்கிகளுக்கு ஆதரவாகவும், இறந்த இருவர் குறித்து சில சர்ச்சை கருத்தைகளையும் வெளியிட்டும் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அதேபோல், போலீகாரர்களுக்கு பால் வினியோகிக்க மாட்டோம் என்ற தெரிவித்த தமிழ்நாடு பால் முகவர் சங்கத்தினருக்கு எதிராகவும், போலீகாரர்களுக்கு ஆதரவாகவும் வாட்ஸ் அப்பில் தகவல்கள் பகிரப்படுகின்றன. அதில், இனி பால் முகவர்களின் வேன்களை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும்; உரிய ஆவணங்கள், சரியான காரணங்கள் இல்லாமல் சுற்று பால் முகவர்களை ‘கவனிக்க’ வேண்டும் என்ற ரீதியில் நீண்ட நெடிய செய்தி பகிரப்பட்டு வருகிறது.
இதெல்லாம் பார்க்கும் போது, சாத்தான்குளம் விவகாரத்தை சத்தம் போடாமல் திசைதிருப்ப உத்திகளை கையாள்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

காக்கிகள் தங்களது தவறுகளை சிந்திக்க வேண்டும். பொதுமக்கள் கேள்வி எழுப்பினாலே, அவர்கள் கோபப்படுவதும், தாக்குவது எந்த வகையில் நியாயம்? எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்பதாலே, அதிகாரத்தை அப்பாவி மக்கள் மீது செலுத்தி வதைப்பது சரிதானா? காக்கிகளின் இத்தகைய சட்ட அத்துமீறுதல் மன்னிக்கக்கூடாத குற்றம்.
சாத்தான்குளம் விவகாரத்தில் அரசுக்கும் தேவையற்ற தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது; எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு கைகட்டி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு இதை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்; தண்டனைகளே அச்சத்தை தரும் என்பது, காக்கிகளுக்கும் பொருந்தும்; வருங்காலத்தில் இதுபோன்ற அடாவடிகளை செய்ய காக்கிகள் சிந்திக்ககூடாது என்றால், தவறு புரிந்தவர்கள் சட்டப்படி கடும் தண்டனைக்கு ஆளாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது ஒன்றே, தமிழக அரசு மீதான களங்கம் போக்க ஒரேவழி.
அடுக்கடுக்காக அராஜகங்கள்!
கடந்த ஜூன் 12ம் தேதி, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ் (27) என்ற கறுப்பின இளைஞர், அந்த நாட்டு காக்கியின் சித்ரவதையால் மூச்சு முட்டி இறந்தார். அதை கண்டித்து, அமெரிக்காவில் கலவரங்கள் வெடித்தன. கறுப்பினத்தவருக்காக இந்த உலகமே போராடியது.
ஜனநாயகம் செழித்தோங்கும் இந்தியாவிலும் காவல்துறையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டு, ஜனநாயக மாண்பையும் மனித உரிமைகளையும் மீறுகின்றனர். சமீபத்தில் மதுரை மத்திய குற்றப்பிரிவு வழக்கு விசாரணைக்குச் சென்ற தவிட்டுச்சந்தையை சேர்ந்த 65 வயதான அழகர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கணேசமூர்த்தி, 29 என்பவர், காக்கி தாக்கியதில் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில், கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஒரு சம்பவம் அரேங்கேறி இருக்கிறது. பழனியப்பபுரத்தைச் சேர்ந்த மதபோதகரான லாசர் பர்னபாஸ் உள்ளிட்ட 9 பேர் புளியங்குளம் கிராமத்தில் ஜெபக் கூட்டம் நடத்தியுள்ளனர். அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாகக்கூறி, அவர்களை அழைத்து வந்து காக்கிகள் கடுமையாக தாக்கிய தகவலும் வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்தில் நடக்கும் அத்துமீறல்களுக்கு, சாத்தான்குளம் சம்பவம் முடிவு கட்ட வேண்டும்.

ரஜினி, விஜய், அஜீத் கப்-சிப்!
கல்நெஞ்சம் கொண்டவர்களையும் சாத்தான்குளம் சம்பவம் கரைய வைத்துள்ளது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேசியத்தலைவர்களும், திரைத்துறையினரும், கிரிக்கெட் பிரபலங்களும் காக்கிகளின் அராஜ போக்கை கடுமையாக கண்டித்துள்ளனர்.
ராகுல் காந்தி, ஸ்டாலினில் தொடங்கி, டிடிவி தினகரன், வைகோ, ஹெச். ராஜா, கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, ஜெயம் ரவி, விஷால், விவேக், நடிகைகள் குஷ்பு, டாப்ஸி மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹன்சிகா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இமான், யுவன் ஷங்கர் ராஜா, அத்துடன் பா. ரஞ்சித், கிரிக்கெட் பிரபலங்கள் ஹர்பஜன், ஷிகர் தவான், அஷ்வின் ரவிச்சந்திரன் என, இந்த கொடூர கொலைக்கு எதிர்ப்பை பதிவு செய்தவர்களின் பட்டியல் நீள்கிறது.
ஆனால், தூத்துக்குடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த், இந்த விவகாரத்தில் எந்த கருத்தையும், இக்கட்டுரை அச்சேறும் வரை தெரிவிக்கவில்லை. 2018-ம் ஆண்டு சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தக்கூடாது என்று கூறி, போராட்டங்கள் நடந்தபோது போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டார்.
அப்போது ஆவேசமாக பொங்கிய ரஜினி, இப்போது மவுனம் காப்பது, பலருக்கும் அதிருப்தியை தந்துள்ளது. முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜய் சேதுபதி போன்றவர்களும் இந்த விவகாரம் பற்றி வாய் திறக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






