--- --:--:-- --

ஊராட்சி நிதி கபளீகரம்? அடிப்படை வசதிகள் இல்லாததால் சிக்கல்! பொங்கியெழும் பொங்குபாளையம் மக்கள்!!

arf

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் ஊராட்சியில் எவ்வித வளர்ச்சிப் பணிகளோ, மேம்பாட்டு திட்டங்களோ நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்பதற்கு, ஊராட்சி தலைவரும், செயலாளரும் பதிலளிக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளனர்.

 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில், பொங்குபாளையம் ஊராட்சி தலைவராக சுலோச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுநாள் வரை அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளின் கைக்கு மாறியதால், இனி வளர்ச்சிப்பணிகள் வேகமெடுக்கும்; ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள், பிற வசதிகள் செய்து தரப்படும் என்று ஊர் மக்கள் நம்பினர்.

 

ஆனால், தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டாலும், பழைய காட்சிகள் மாறவில்லை. அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெரு விளக்கு போன்றவற்றை செய்து தருவதில் கூட, ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக, பொதுமக்கள் வருத்தத்தோடு தெரிவிக்கின்றனர்.

கொர்ர்ர்.....ஊராட்சி மன்ற தலைவி
கொர்ர்ர்…..ஊராட்சி மன்ற தலைவி சுலோச்சனா

பொதுவாக கிராம ஊராட்சிகளுக்கு வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, விளம்பர வரி, நூலக வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அத்துடன் குடிநீர் கட்டணம், தொழில் உரிமக்கட்டணம், கட்டிடம் அல்லது மனைப்பிரிவு உரிமக்கட்டணம், கட்டிடக் குத்தகை, சந்தை குத்தகை, ஒப்பந்தப்புள்ளி பதிவுக் கட்டணம் போன்றவற்றின் மூலமும் வருவாய் பெறுகின்றன.

 

இவ்வாறு சொந்தமாக கிடைக்கும் வருவாயில் செய்யப்படும் அனைத்து செலவுகளுக்கும் கிராமசபையின் ஒப்புதல் அவசியமாகும். இதை கொண்டு தெரு விளக்குகள் அமைத்தல், கிராமச்சாலைகள் அமைத்தல், குடிநீர் வழங்குதல், கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல், சிறிய பாலங்கள் கட்டுதல்., தொகுப்பு வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

 

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், ஆண்டுக்கு நான்கு முறை கிராம சபை கூட்டப்படுகிறது; ஊருக்கு தேவையான திட்டங்கள் குறித்து விவாதிப்பது, முந்தைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் செயல்பாடுகளை மதிப்பிடுவது, வரவு-செலவு கணக்கை சமர்ப்பிப்பது, மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை மக்களிடம் சமர்ப்பிப்பது போன்ற பணிகள் நடக்கின்றன.

ஊராட்சி நிதியை கபளீகரம் செய்து வரும்  "கில்லாடி"கிளாா்க் தமிழரசன்
ஊராட்சி நிதியை கபளீகரம் செய்து வரும் “கில்லாடி”கிளாா்க் தமிழரசன்

ஆனால், பொங்குபாளையத்திலோ எல்லாமே ஏட்டளவிலும், சம்பிரதாயத்துக்கும் நடப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்காமல் உள்ள நிலையில் அரசு ஒதுக்கும் நிதி, எம்.எல்.ஏ. தொகுதி நிதி போன்றவை எங்கு செல்கிறது என்ற பொதுமக்கள் பொங்கி எழுகின்றனர். மத்திய நிதி ஆணையநிதி, மாநில நிதி ஆணைய நிதி, மத்திய அரசின் திட்ட நிதி, மாநில அரசின் திட்ட நிதியும் கிடைக்கிறது. ஆனால், வளர்ச்சிப்பணிகளுக்கான நிதியை, ஊராட்சி தலைவரும், செயலாளரும் பங்கு போட்டுக் கொள்வதாக, பொதுமக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம், ரோடு சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்; மாறாக பணிகள் நடக்காமல், போலி பயனாளிகள் அல்லது வேண்டியவர்களை சேர்த்து, பணத்தை கபளீகரம் செய்வது, ஒருசில ஊராட்சிகளில் நடக்கிறது. பொங்குபாளையத்திலும் அவ்வாறு நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஏற்கனவே கடந்தாண்டு வீட்டுமனை அங்கீகாரத்திற்கு முறைகேடாக தொகை வசூலித்த புகாரில், பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

எனவே, எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளாதது குறித்து, பொங்குபாளையம் ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளரை மாவட்ட நிர்வாகம் விசாரிக்க வேண்டும். கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Right Menu Icon