தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டணம், தேங்காய் பண்டகசாலைத் தெருவைச் சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் இவரது மனைவி பாத்திமா (49) உடல்நலக்குறைவால் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதுபோல் கோவில்பட்டி, பாரதி நகர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சுப்பையா (65) என்பவர் உடல்நலக்குறைவால் கடந்த 25ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால்அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார். இதன் மூலம் தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.







