கொரொனாவால் இறந்தவர்களின் உடல்களை சிகிச்சை பெறும் இடத்திற்கு அருகில் வைத்துள்ளதால் நோயாளிகள் அச்சம்!
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரொனாவால் உயிரிழந்த இருவரது உடல் முறையாக அப்புறப்படுத்த படாமல் கொரொனா வார்டில் சிகிச்சை பெறும் மையத்திற்கு அருகில் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை 820 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
நேற்று இரவு கொரொனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல், கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறக் கூடிய அந்த இடத்திற்கு மிக அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே இடத்தில் இரண்டு உடல்களும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக அந்த உடல்கள் அப்புறப்படுத்தாமல் சிகிச்சை பெறக்கூடிய இடத்திற்கு மிக அருகிலேயே இருப்பதால் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது அவர் உடலை எடுத்துக் கொண்டு செல்லும் போது ஊழியர்கள் கவனக்குறைவாக அங்கு வைத்துவிட்டு சென்று இருக்கலாம் அது மாதிரியாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.






