சாத்தான் குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ் , பென்னிக்ஸ் உடல் நல்லடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை மகன் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டன. பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்ததாக கூறி கடந்த 19ஆம் தேதி இரவு ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் தந்தை மகன் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு இரண்டு பேரின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து சாத்தான்குளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகநாதன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அரசின் நிவாரண நிதியான தலா 10 லட்சம் ரூபாயை அவர்களது குடும்பத்தினரிடம் எம்எல்ஏ சண்முகநாதன் வழங்கினார்.
பின்னர் அவர்களது உடல்கள் சிஎஸ்ஐ ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு இறுதி பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பிறகு அங்குள்ள கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மாவட்ட எஸ்பிக்கள் உட்பட 650 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






