திருப்புவனத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஊரணி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகரின் மையப் பகுதியில் மட்டை ஊரணி என்றழைக்கப்படும் மார்க்கண்டேய ஊரணி நாளடைவில் கழிவு நீர் குட்டையாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிப்போயிருந்தது. இந்த ஊரணி அருகே இரண்டாயிரம் மாணவிகள் பயிலும் அரசு பெண்கள் பள்ளி, தனியார் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நிலத்தடி நீர் வெகு பாதாளத்திற்கு சென்று விட்டது.
இந்த ஊரணியை தூர் வார முடிவு செய்யப்பட்டு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள மார்கண்டேய ஊரணி தூர் வாரும் பணி ரூ.1.50 கோடி செலவில் பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இப்பணிகள் முடிவடைந்து தெப்பக்குளமாக உருவாக்கப்பட்டுள்ளது. அருகே வைகை ஆறு உள்ளதால், வைகையில் தண்ணீர் திறப்பின் போது இந்த தெப்பகுளத்தில், தண்ணீர் நிரப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தை சுற்றி நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆழ்துளை கிணறு அமைத்து தெப்பகுளத்திற்கு நீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பின் ஊரணி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதால் திருப்புவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.






