டெல்லியில் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொரொனா பாதிப்பு!
இந்தியாவில் எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு டெல்லியில் ஒரே நாளில் நேற்று நான்காயிரம் பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் மிக அதிகமான அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் மட்டும் சுமார் 68 ஆயிரத்து 500 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரொனா பாதிப்பில் மும்பையுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது டெல்லி. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 66 ஆயிரத்து 602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் வெகுவிரைவில் அதிக பாதிப்புகளை கொண்ட இந்திய நகரங்கள் பட்டியலில் டெல்லி முதல் இடத்திற்கு சென்று விடும் என்று அஞ்சப்படுகிறது.
அதிக அளவு பரிசோதனைகள் செய்யப்படுவதே எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. டெல்லியில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்ததாக சென்னை, மும்பை நகரங்களில் அதிக பரிசோதனைகள் நடைபெறுகின்றன.
டெல்லியில் கொரொனாவால் உயிரிழப்பவர்களின் அளவு 3.5 சதவீதமாக இருப்பது கவலை தரக்கூடிய விஷயமாக உள்ளது. பற்றாக்குறை என்பது அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் டெல்லியில் மிக முக்கியமான பகுதியான சர்தர்பூர் என்ற இடத்தில் பத்தாயிரம் படுக்கை வசதிகளை கொண்ட கோவிட் மையத்தை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த மையம் செயல்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். நிலைமை மோசமடையும் பட்சத்தில் மேலும் 20,000 படுக்கை வசதிகளையும் 250 ஐசியு வார்டுகளையும் அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.






