நளினி, முருகன் சந்திப்புக்கு அனுமதி மறுப்பது ஏன்?
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்தித்து பேச நளினிக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த மனுவில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஆனால் கடந்த 3 மாதங்களாக இவர்கள் சந்தித்து பேச சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
முருகன் கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கவும் அவரை சந்திக்க நளினிக்கு அனுமதி அளிக்க உத்தரவிடு மாறும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு சிறை விதிகளின்படி இருவரையும் சந்தித்து பேச கூட அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.






