சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உடுமலைப்பேட்டை குமர லிங்கத்தை சேர்ந்த சங்கரும், பழனியை சேர்ந்த கௌசல்யாவும் 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கு கௌசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் ஷங்கர் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். விசாரணையில் கௌசல்யாவின் குடும்பத்தினர் தான் இந்த ஆணவக்கொலை நிகழ்த்தியது தெரியவந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த திருப்பூர் நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும் மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. கௌசல்யாவின் தாயார் உள்ளிட்ட மூவரை விடுவித்தது.
பின்னர் மரண தண்டனையை உறுதி செய்யக் கோரும் நடைமுறைப்படி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. 3 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து காவல்துறையினரும் தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்தனர்.
வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி சத்தியநாராயணன், நிர்மல்குமர் அமர்வில் விரிவாக நடத்தப்பட்டது, இதையடுத்து அந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.






