--- --:--:-- --

பூசாரி குடும்பத்தினரிடம் பணம், நகை கொள்ளை..! சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என கொலை மிரட்டல்!

11

கோவில் பூசாரியின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகைகள் மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியது. இரண்டடி நீள பட்டாக்கத்தி, சத்தமிட்டால் ரத்தம் தெறிக்கும் என கொலை மிரட்டல், வீட்டில் உள்ள அனைவருக்கும் டேப் மூலம் வாய்ப்பூட்டு இத்தனையும் செய்துவிட்டு கனகச்சிதமாக திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டியில் அரங்கேறியது ஒரு கொள்ளை சம்பவம்.

 

அதே ஊரில் உள்ள சிவன் கோவிலில் பூசாரியாக உள்ள துரை ஆதித்தன் என்பவரை அணுகியது 8 பேர் கொண்ட ஒரு கும்பல். தாங்கள் வந்த டாடா மேஜிக் வாகனத்திலேயே பூசாரி துரையை அழைத்து சென்றுள்ளனர். கோவில் தொடர்பாக பேசி வந்துள்ளனர் என கருதி அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற துரைக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

 

வீட்டில் நுழைந்த உடனே அந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்ட அதிர்ச்சியில் உறைந்தார் துரை. அதிர்ச்சியில் உறைந்த துரையின் குடும்பத்தினர் 5 பேரின் கை மற்றும் வாயை டேப்பால் கட்டிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டது அந்த கும்பல். அப்போது துரையின் மருமகன் தனது செல்போன் மூலம் யாருக்கோ தகவல் தெரிவிக்க முற்பட்டபோது பறந்து வந்த ஒரு ஆயுதம் அவரது கையைப் பதம் பார்த்தது.

 

பின்னர் வீட்டில் இருந்த 100 சவரன் நகை 35 லட்சம் ரூபாயை அந்த கும்பல் கொலை எடுத்துக்கொண்டு மின்னல்வேகத்தில் தப்பியது. தகவலறிந்து வந்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்ததில் கொள்ளையில் 7க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

 

காரில் 7 பெரும், டாடா மேஜிக் மற்றும் இருசக்கர வாகனத்தில் தலா இருவரும் இருந்தது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காரில் கொள்ளையர்கள் தப்பிச் செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அந்த கும்பல் சென்ற கார் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியான தச்சம்பட்டி காட்டுப்பகுதியில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அங்கு வந்த காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட செல்லபாண்டி, கல்யாணசுந்தரம், சந்தோஷ், கலைஞானம் உள்ளிட்டவர்களை மடக்கிப்பிடித்தனர். மேலும் தப்பிச்சென்று நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் அதிலிருந்து 53 சவரன் நகை 507 கிராம் வெள்ளி, 35 லட்சம் ரொக்கம் மற்றும் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

 

கொள்ளைச் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் நான்கு மாவட்ட காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை துரத்தி சென்று கைது செய்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon