கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள 5 கேள்விகள்!
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன் என்பன உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்குமாறு எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் கொரொனா பரவலுக்கு அரசின் அலட்சியமே காரணம் என குற்றம் சாட்டினார்.
கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையை கடை பிடிக்க வில்லை என்றும் சென்னையில் கொரோனாவால் இறந்த 736 பேரின் மரணம் மறைக்கப்பட்டது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார். கொரொனா விவகாரம் தொடர்பாக முதலமைச்சருக்கு 5 கேள்விகளையும் ஸ்டாலின் முன்வைத்தார்.
தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது ஏன் எனவும் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டம் எப்போது வெளியிடப்படும் என்றும் வினவினார். கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் உடன் ஆக்கபூர்வமாக ஆலோசிக்க அரசு தயங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய ஸ்டாலின் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக குழுவுக்கு மேல் குழு அமைக்கப்பட்ட நிலையில் அந்தக் குழுக்களின் அறிக்கைகள் எங்கே என வினவினார்.
கொரோனா பாதிப்புக்கு பிறகு பொருளாதாரத்தை மீட்பது மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்வது ஆகியவற்றில் எப்போது அக்கறை செலுத்துவீர்கள் என்றும் பதிலளிக்குமாறு முதலமைச்சரிடம் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார்.






