10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல்…!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்களுக்கு வருகைப் பதிவை கணக்கீடு செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் அதனை தீர்க்கும் விதமாக வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மேற் படிப்பு சேர்க்கைக்கான மதிப்பெண்களுக்கு வருகைப்பதிவு 20 சதவீதத்திற்கு கணக்கிடப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் வருகைப்பதிவு போன்றவை இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் தனியார் பள்ளிகள் அப்படி கண்காணிக்க படுவதில்லை என்று கூறப்படுகிறது.
அம்மை போன்ற காரணங்களால் உடல் நலம் பாதிக்கப்படுதல், நெருங்கிய உறவினர் உயிரிழப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விடுப்பு எடுத்த மாணவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இத்தகைய சூழலில் வருகைப்பதிவு அடிப்படையிலான மதிப்பெண்களை வழங்க ஆசிரியர்கள் கல்வியாளர்கள் ஆலோசித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வகுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி செய்யப்பட்ட தேர்வுக்கு மாற்றான நடைமுறைகளில் அவர்களின் நலம் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் அவசியமாக பார்க்கப்படுகிறது.







