மேட்டூர் அணையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நீர் திறப்பு!
டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக 8 ஆண்டுகளுக்கு பிறகு உரிய தேதியான இன்று மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. அதன் மொத்த நீர்மட்டம் 120 அடி. அதன் முழு கொள்ளளவு 93.47 டிஎம்சி. அணையின் நீர்த்தேக்க பரப்பளவு 60 சதுர கிலோமீட்டர்.
தமிழக காவிரி நீர்ப் பரப்பு பரப்பளவுசுமார் 6 ஆயிரத்து 300 சதுர கிலோமீட்டர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட முப்போக சாகுபடிக்கு மேட்டூர் அணையில் தேக்கப்படும் தண்ணீரே ஜீவாதாரம். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 8 ஆண்டுகளாக பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாததால் ஜூன் 12ஆம் தேதி அணையைத் திறக்க இயலவில்லை.
இதனால் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் 300 நாட்களுக்கு மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு உரிய தேதியான ஜூன் 12ல் பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
திறக்கப்படும் தண்ணீர் ஈரோடு, நாமக்கல் வழியாக திருச்சி கல்லணை அடைந்து அங்கிருந்து பின்னர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் என பாசனத்திற்கு பலன் அளித்து கடைமடை பகுதியான நாகை மாவட்டம் பூம்புகார் வரை செல்லும்.
இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜனவரி 28 ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்படும். இதற்கு இடைப்பட்ட நாட்களில் அணையில் இருந்து சுமார் 360 டிஎம்சி தண்ணீர் தேவை என்ற நிலையில் கேரளா, கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தென் மேற்குப் பருவ மழையை பொருத்து டெல்டா மாவட்டங்களில் எந்த மாதிரியான விவசாயத்தை மேற்கொள்ளலாம் என்பதை விவசாயிகள் தீர்மானிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் டெல்டா பாசனத்திற்கு 8 கண் மதகு வழியாக தண்ணீர் திறக்கப்படும். அதற்காக 8 கண் மதகு பகுதியில் மேடை அமைக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நின்று தண்ணீர் திறப்பதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் சுமார் 20 நிமிடங்களுக்கு மட்டுமே 8 கண் மதகு வழியாக வெளியேற்றப்படும்.
அதன் பிறகு டெல்டா பாசனத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை பொறுத்து அனல் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு அதன் மூலமாக மின்சார உற்பத்தியும் தொடங்கப்படும். முதற்கட்டமாக காலை வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து இரவுக்குள் படிப்படியாக நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






