கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்றிய முதியவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார்!
சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் வசித்து வருபவர் பிஎன் டயர்ஸ். எண்பது வயதான இவர் லயோலா கல்லூரியில் 40 ஆண்டுகால ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வீட்டின் முதல் தளத்தில் தனது மகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு வளர்ப்பு பிராணிகள் மீது பாசம் என்பதால் அந்த தெருவில் உள்ள நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவளித்து வீட்டின் தரைத்தளத்தில் அவை இருக்க இடம் அளித்துள்ளார். இந்த நிலையில் இவர் வளர்க்கும் பூனை ஒன்று நிலைதடுமாறி வீட்டிற்குப் பின்புறம் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ளது.
இதனைக்கண்ட டயர்ஸ் உதவுவதற்கு அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக அருகிலிருந்த சிறு ஏணியை எடுத்துக் கொண்டு வந்து கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பூனையைக் காப்பாற்றி விட்டார். ஏணி மூலம் கிணற்றிலிருந்து வெளியே வர முயற்சித்த போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த பிஎன் டயர்ஸ். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்தனர் .
அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து கீழ்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் சுமார் 6 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லேசான காயங்களுடன் கிணற்றில் இருந்த டயர்ஸை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு பேராசிரியர் டயர்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாராட்டுக்களை தெரிவித்தனர். வாயில்லா ஜீவன் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து தமது முதுமை பற்றி கவலை கொள்ளாமல் தானே இறங்கி காப்பாற்ற முயன்ற அவரது துணிச்சலை தீயணைப்புத்துறையினர் பாராட்டினார்.






