இந்தியா முழுவதும் நாளை நடைபெற உள்ள எய்ம்ஸ் முதுநிலை நுழைவுத் தேர்வு!
எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. கொரொனா தொற்று அதிகமாக பரவும் நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தும் நாளை தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் தேர்வுக்கான ஏற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பார்கோடு கொண்ட நுழைவு சீட்டு, சானிடைசர் பயன்பாட்டுக்கு பிறகு கை ரேகை வைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






