ஆன்லைனில் கல்வி கற்கும் மாணவர்கள்….ஆபாச இணையதள பாப் அப்களால் பெற்றோர் அச்சம்..!
பாடங்களை இணையதளத்தில் கவனிக்கும்போது ஆபாச இணையதளங்களுக்கான பாப் அப் வெளிப்படுவதைத் தடுக்க விதிகளை வகுக்காமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயான சரண்யா என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மாநிலத்தில் 8 விழுக்காடு வீடுகளில் மட்டுமே இணையதள வசதியுடன் கணினிகள் இருப்பதாகவும் மின்னணு முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற கிராமப்புற மற்றும் ஏழை பணக்கார மாணவர்கள் இடையே சமநிலையற்ற நிலை உருவாகி இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான மின்னணு உள்கட்டமைப்பு வசதிகள் இன்மையால் மாணவர்களும் ஆசிரியர்களும் சவால்களை சந்தித்ததாகவும் பல இடையூறுகள் இருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






