சீனா – இந்தியா எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண இந்தியா விருப்பம்!
சீனாவுடன் பல ஆண்டுகளாக நீடித்து வரும் எல்லைப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மக்களிடம் காணொளி காட்சி முறையில் பேசிய ராஜ்நாத் சிங் எல்லை விவகாரத்தில் இந்தியா தன் கவுரவத்தையும், சுயமரியாதையையும் எந்த சூழ்நிலையிலும் விட்டு தராது என்றும் நாடு வலுவான தலைமையின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் கடந்த ஆறாம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். எல்லைப் பிரச்சனையில் ராகுல் காந்தி கூறிய கருத்துகளை விமர்சித்த ராஜ்நாத் சிங் இவ்விவகாரத்தில் நாடே ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும் நமது படைகளின் வலிமை மீது நம்பிக்கை வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்தியா – சீனா இடையே கருத்து வேறுபாடு மோதலாக மாறி விடக்கூடாது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.







