கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு!
கொரொனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. மேலும் இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்தன.
இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கொரொனா நோயாளிகளிடம் இருந்து பெறப்பட வேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்த அறிக்கையை ஆய்வு செய்ய தமிழக அரசு மக்கள் நலன் கருதி கட்டணங்களை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
கொரொனா அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறியுடன் கூடியவர்களுக்கு அதிகபட்சமாக நாளொன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டணங்கள் அதிகபட்ச கட்டணம் என்றும் இதற்கு மேலான தொகையை நோயாளிகளிடம் இருந்து வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.






