நளினி உறவினர்களிடம் வீடியோ காலில் பேச அனுமதி மறுப்பது ஏன்?
முன்னாள் பிரதமர் ராஜீவ்கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதிக்க மறுப்பது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக நளினியின் தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமணி அம்மாவுடன் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஏற்கனவே முருகனின் தந்தை காலமானபோது அவரது உடலை வீடியோகால் மூலம் பார்க்க முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். வழக்கில் தமிழக அரசின் சிறைத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை எனவும் உறவினர்களிடம் இந்தியாவிற்குள் பேச அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது வெளிவிவகாரத்துறை சம்பந்தப்பட்டது என்பதால் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சட்டமன்றத்தில் 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக புதன்கிழமை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.







