ஊரெல்லாம் ’குற்றம் குற்றமே’செய்தியே பேச்சு… ஊராட்சி செயலருக்கு போலீஸ் வலைவீச்சு!
பசுமை இல்ல திட்டத்தில் முறைகேடு புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான அ.மனக்குடி ஊராட்சி செயலர் சந்தனராஜ் குறித்த செய்தி, ‘குற்றம் குற்றமே’ வார இதழிலில் வெளியானதன் எதிரொலியாக, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் கடலூர் அருகே உள்ள அ.மனக்குடி ஊராட்சி மன்ற செயலராக பணி புரிந்து வருபவர் சந்தனராஜ் (எ) முனியசாமி. இவர் மீது பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. சர்ச்சைகளுக்கு பேர்போன கூத்தன்வயல் கிராமத்தை சேர்ந்த சந்தனராஜ்,கடலூர் ஊராட்சியில் முதன்முதலாக பணியமர்த்தப்பட்டார். அங்கு, விதிகளை மீறி செய்த பணிகளுக்காக, பின்னர் ஊரணங்குடி ஊராட்சி மன்ற எழுத்தராக, சந்தனராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கும் சந்தனராஜ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அழகர்தேவன்கோட்டை ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். அங்கு, கையாடல் புகாரில், 2016ம் ஆண்டில், மூன்று ஆண்டுகளுக்கு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கடந்தாண்டுதான், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், வழக்கம் போல், அவர் தனது ‘பணிகளை’ செய்ய ஆரம்பித்தார்.
கடலூர் ஊராட்சியில், அரசால் வழங்கப்படும் பசுமை வீட்டை, ஊராட்சி செயலர் சந்தனராஜ், சட்ட விரோதமாக வேறு நபரின் பெயரில் தனது இடத்திலேயே கட்டி வருவதாக தகவல்கள் கசிந்தன. இதனால் பாதிக்கப்பட்ட உண்மையான பயனாளிகள், தங்களுக்கு வீடு கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைப்பட்டனர்.
இது குறித்த தகவலின் பேரில் உண்மைகளை விசாரித்து, ’பசுமை இல்லத்திட்டத்தில் முறைகேடு? ஏழைப்பயனாளிகளுக்கு சாபக்கேடு’ என்ற தலைப்பில், 03.06.2020 தேதியிட்ட ‘குற்றம் குற்றமே’ வார இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதை பார்த்து கொதித்துப் போன ஊராட்சி செயலர் சந்தனராஜ், உடனடியாக நமது நிருபருக்கு போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன் அவரும், அவரது மனைவியும் நமது நிருபரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதையடுத்து, ’குற்றம் குற்றமே’ வார இதழின் மண்டல செய்தியாளர் மகேந்திரன், திருபாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஊராட்சி செயலர் சந்தனராஜ், அவரது மனைவி இருவரும் நமது நிருபருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. நமது நிருபரின் புகாரை தொடர்ந்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காவல்துறையினருக்கு சபாஷ்!
பசுமை இல்லத்திட்ட பயனாளிகளின் கண்ணீர் நிலை குறித்து ‘குற்றம் குற்றமே’ வார இதழ் துணிச்சலுடன் செய்தி வெளியிட்டு வெளிச்சம் போட்டு காட்டியது, இராமநாதபுரம் மாவட்டத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, புகாருக்கு ஆளான சந்தனராஜ் பணிபுரியும் அ.மனக்குடி பகுதியில் இந்த செய்தி பெரும் தாக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
நமது செய்தியை படித்த பசுமை இல்லத்திட்ட பயனாளிகளில் சிலர், இனி நமக்கான வீடு எங்கேயும் போய்விடாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக, பாராட்டினர். தவறுகள் எங்கு நடந்தாலும் அதை, நமது இதழ் தொடர்ந்து விசாரித்து வெளியிட்டு தீர்வை தரவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்துள்ள திருப்பாலைக்குடி காவல் துறையினருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






