பிரதமர் மோடியின் பாராட்டை பெற்ற மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் நபர்!
மதுரையிலுள்ள முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் ஒருவர் மோடியின் பாராட்டை பெற்றுள்ளார். தன்னலம் பாராமல் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்தவர். மனிதநேயம் காத்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்கிறார். மனித சமூகம் பகிர்ந்துண்டு வாழ்ந்தால், பஞ்சம் என்பது பலருக்கும் இருக்காது.
அந்த வகையில் மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்த தொகையில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார் முடிதிருத்தும் கடையின் உரிமையாளர் மோகன். மதுரை அண்ணாநகர் பகுதியில் கடை நடத்தி வரும் இவர் ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார்.
இவரின் மகத்தான சேவையை மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நினைவுகூர்ந்து மனதார பாராட்டி உள்ளார். நாட்டின் பிரதமர் தன்னை பாராட்டியதை தமக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்று அவர் கூறியுள்ளார். உன்னதமான இந்த உதவிக்கு பின்னால் மோகனின் மகளான நேத்ராவின் பங்கு அளப்பரியது.

கடந்த காலத்தில் தாங்கள் பெறும் கஷ்டத்தில் இருந்ததாகவும் அந்த வேதனையை பொது முடக்கத்தில் ஏழைகள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்களுக்கு உதவ வேண்டும் என்று நேத்ரா தனது தந்தையிடம் வலியுறுத்தியுள்ளார்.
மனிதன் என்ற சொல்லுக்கு உதாரணமாக உள்ள இந்த குடும்பத்தினரை போல அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்தால் எத்தகைய இடர்களையும் மனித சமூகம் வீழ்த்திவிடும் என்பதே உண்மை.






