மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்! இந்துமுன்னணி அறிவிப்பு!
வழிபாட்டு உரிமைகளை மீட்க மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள்.
மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் எனவும்,
கொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் கடவுள் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்கும் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன எனவும்,பெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு.கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில் கிராமப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்ப்புற கோவில்களையும் உடனே திறக்கலாம்.பெரிய கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம்.
உள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தொிவிக்கப்பட்டுள்ளது.






