அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நான்கு மண்டலங்களாக பிரித்து மண்டல செயலாளர்களும் நியமனம் – ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு !!!
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதிக்காக சென்னை,வேலூர்,கோவை,மதுரை என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாக வசதிக்காக சென்னை,வேலூர்,கோவை,மதுரை என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,சென்னை மண்டலத்திற்கு அஸ்பயர் கே.சுவாமிநாதனும்,வேலூர் மண்டலத்திற்கு கோவை சத்யனும்,கோவை மண்டலத்திற்கு சிங்கை ஜி.ராமச்சந்திரனும்,மதுரை மண்டலத்திற்கு ராஜ் சத்யனும் என நான்கு மண்டலத்திற்கும் மண்டல செயலாளர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்றும்,துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளும்,கழக உடன்பிறப்புகளும்,மண்டல செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிடவும் இருவரும் கூட்டாக கேட்டுக்கொண்டுள்ளனர்.






