மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது; திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும்,மிக விரைவில்;அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது – நடிகர் கமல்ஹாசன் ட்வீட் !!!
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இதனால் நாடு முழுவதும் 3 வது முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இந்த ஊரடங்கில் சில தளர்வுகளும் பின்பற்றப்பட்டன.அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகள் சில விதிமுறைகளோடு கடந்த மே 7 ஆம் தேதியன்று 43 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மே 7 மற்றும் 8 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனையும் நடைபெற்றது.
வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் டாஸ்மாக் கடைகளில் சமூக விலகலை முறைப்படி பின்பற்றவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.உத்தரவை அடுத்து மதுக்கடைகள் மூடப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அவ்வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.பின்னர்,மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்தது.மேலும், உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் டாஸ்மாக் கடை திறப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. அதனையடுத்து நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகக்கவசம் அணிவது,7 நாட்க ளுக்கும் 7 கலரில் டோக்கன் விநியோகம் செய்து என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் ” மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குள்ள தாய்க்குலம் வாழ்த்துச்சொன்னது.திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும்,மிக விரைவில்.அப்போது,நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டு தப்பிக்க முடியாது ” என சூசகமாக தெரிவித்துள்ளார்.






