உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையம் இந்தியா!நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் மூன்றாவது கட்ட சலுகைகளை அறிவித்த அவர் பால், பால்பொருட்கள் உள்கட்டமைப்புக்கு 15,000 கோடி ரூபாய்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பால் பொருட்கள் நெய் உள்ளிட்டவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊரடங்கின் போது உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதற்காக 74 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளிடமிருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

பத்தாயிரம் கோடி ரூபாயில் நுண்உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும் என அறிவித்த நிர்மலா சீதாராமன் இதன் மூலம் சுமார் 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பயன் அடையும் என்றார். மகளிர் சுய உதவி குழுக்கள் ,வேளாண் பொருட்கள் உற்பத்தி யாளர்கள் நுண்உணவு உற்பத்தி நிறுவனங்கள் மூலம் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.
10 ஆயிரம் கோடியில் உருவாகும் இந்த நுண் உற்பத்தி நிறுவனம் மூலம் தமிழகத்தில் மரவள்ளிக்கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.






