--- --:--:-- --

” ஹைடெக் ” காலத்திலும் அடிப்படை வசதிகள் கிடைக்காத பழங்குடியின கிராமம் !!!

17

நான்கு தலைமுறைகளாக சாதி சான்றிதழ், மின்சாரம், ரேசன் கார்டு இல்லாமல், கேள்விக்குறியான காலத்தோடு போராடும் மலைவாழ் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.மழையில் ஒழுகும் ஓலைக்குடிசைகள். பாதியில் நிற்கும் பசுமை வீடுகள், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை, படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள்.இது ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை.

 

கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ரொட்டி கவுண்டன்புதூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி மக்களின் நிலை. காடு, மலைகளில் வாழும் பழங்குடிகளுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட சமவெளியில் வசிக்கும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.

இப்பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களுக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. குறுகிய ஓலைக்குடிசையில் பொருட்களை அடைத்து வைத்து, குடும்பம் நடத்துவதே பெரும்பாடாக உள்ளது. மழைக்காலத்தில் இவர்களின் சிரமங்களை சொல்லி மாளாது. சிலருக்கு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்பட்டாலும், எல்லாம் பாதியில் நிற்கிறது.

 

6 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையும் பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. மின்சாரம், சாலை உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இன்னும் வந்து சேரவில்லை. இரவு மட்டுமல்ல பகலும் தங்களுக்கு இருட்டாகவே உள்ளதாக பழங்குடிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

என்ன தான் அடிப்படை வசதிகள் இருந்தாலும் தற்போது நிலவி வரும் கத்திரி வெயிலில் சற்று நேரம் கூட நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது.ஆனால்,கடந்த 60 ஆண்டுகளாக இப்பழங்குடிகளின் நிலையோ சொல்லி மாளாது.

 

என்ன தான் கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்து ” ஹைடெக் ” ஆக மாறியிருந்தாலும் இன்னும் கூட இது மாதிரியான கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன.கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுமா ? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon