இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த வெளிமாநில நபர்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
ஊரடங்கு உத்தரவால் இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின்நிலையத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபடும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 55 பேர் சொந்த மாநிலத்திற்கு செல்ல முடியாமல் பரிதவிப்பு. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் செல்ல முயன்றதால் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி நடவடிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உப்பூர் அனல்மின் நிலையத்தில் மத்திய அரசு நிறுவனமான பாரத மிகை மின் நிலையத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 55 பேர் கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,அங்கு பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 55 பேரும் கடந்த 45 நாட்களாக போதுமான உணவின்றியும், செலவிற்கு பணமும் கிடைக்காமலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், கடந்த 45 நாட்களாக வேலை செய்ததற்கான சம்பளப் பணமும் வழங்கப்பட வில்லையெனவும் கூறப்படுகிறது.

இதனால் தங்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அனல்மின் நிலைய நிர்வாகிகளிடம் 55 பீகார் மாநிலத்தவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கடந்த வாரம் அனல்மின் நிலைய வளாகத்தின் உள்ளேயே உள்ளிருப்பு போராட்டமும் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்த அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்த பீகார் மாநிலத்தவர் 55 பேரும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக உப்பூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பீகார் மாநிலத்திற்கு செல்வதாகக் கூறி நடை பயணமாக வந்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாடானை தாசில்தார் மாதவன், திருவாடானை டிஎஸ்பி.புகழேந்தி கணேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் அங்கு நடை பயணமாக வந்து கொண்டிருந்த 55 பேரையும் ஒரு டிராக்டர் மற்றும் டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி தொண்டி பழைய பேருந்து நிலைய சோதனைச் சாவடி அருகே அனைவரையும் பத்திரமாக மீட்டு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனர்.

அதன் பிறகு அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதாக காவல் துறையினரும் மற்றும் வருவாய் துறையினரும் உறுதி அளித்ததன் பேரில் அங்கு அவர்களை தனிமைப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






