தொழிலாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை வழங்க அரசு உதவ வேண்டும்!
கொரொனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சமூக பரவலாக கொரொனா மாறி விடாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மக்களுக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நோய் தொற்றை கட்டுப்படுத்த பொது முடக்கம் என்கிற போதிலும் அதனால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் உழைப்பாளி மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது என தெரிவித்துள்ள ஸ்டாலின் வருமானம் இன்றி தவிக்கும் கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், வார ஊதியம் பெறுபவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
நெருக்கடியான நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய் துறையினர், உள்ளாட்சி துறை யினர், மின்சாரத் துறை யினர் உள்ளிட்ட துறைகளில் ஊழியருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அரசை குறை சொல்வதற்காகவோ, அரசியலுக்காகவோ இவற்றை சொல்லவில்லை என்றும் குறை காண முடியாத அரசாக எல்லோருக்குமான அரசாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அக்கறையுடன் கூறுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







