மார்ச் மாதம் ஓய்வு பெற்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் தற்காலிக பணி நீட்டிப்பு!
இம்மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே ஆயிரத்து 508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்ற மருத்துவர் செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்தில் தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்ற வருகிறார்கள் என்றும் முதல்வர் கூறுகிறார்.
வரும் 30ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வுபெற உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் இரண்டு மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தற்போது ஆயிரத்து 323 செவிலியர்கள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள் ஆணை பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தியுள்ளார்.







