இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது..! உயிரிழப்பும் 645 ஆக உயர்வு!!
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து 20,080 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 645 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 1000 என உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 1541 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,080 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் 24 மணி நேரத்தில் 53 ஆகி மொத்த பலி எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பும், உயிரிழப்பும் கிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் 4-ல் ஒரு பங்கு மகாராஷ்டிராவில் தான் பதிவாகி மொத்த எண்ணிக்கை 5241 ஆகவும், உயிரிழப்பும் 3-ல் ஒரு பங்கு என மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. அடுத்தபடியாக டெல்லி ( 2050), தமிழ்நாடு (1596) ஆகிய மாநிலங்கள் உள்ள நிலையில், ராஜஸ்தான், குஜராத், ம.பி., ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் பொருட்டு, சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் , சோதனை முடிவுகளை காட்டுவதில் பெரும் குளறுபடி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரேபிட் டெஸ்ட் கிட்கள் மூலம் பரிசோதனை நடத்த 2 நாட்களுக்கு தடை விதித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






