அமெரிக்காவில் வேலை இல்லா திண்டாட்டம்..! வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவது நிறுத்தம்..! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால் அமெரிக்கர்கள் பலரும் வேலையிழந்து தவிக்கின்றனர். இதனால் வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்கா செய்வதறியாது தத்தளிக்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தான் இப்போது டாப் இடத்தில் உள்ளது. உலகில் இன்று வரை மொத்தமாக கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 24,82,578 ஆகி கிட்டத்தட்ட 25 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 3-ல் ஒரு பங்கு என்ற எளவுக்கு 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளன். இதே போல் உலக மொ1,70, 477 பேர் என்றால், இதில் 4-ல் ஒரு பங்கு என அமெரிக்காவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,518 ஆக உயர்ந்துள்ளது.
இப்படி ஒரு பேரழிவை எதிர்பார்க்காத அமெரிக்கா, படு திண்டாட்டத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் டிரம்ப் எடுக்காத முயற்சிகள் இல்லை என்ற அளவுக்கு தீவிரம் காட்டி வருகிறார். தனது நாட்டுக்கு மாத்திரைகளை அனுப்பாவிட்டால், நண்பன் என்று கூட பார்க்க மாட்டேன்; தக்க பதிலடி கொடுப்பேன் என இந்திய பிரதமர் மோடிக்கு மிரட்டல் விட்டு காரியம் சாதித்தார். அது மட்டுமின்றி, வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய கொரோனா தடுப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகளையும், வழிப்பறி செய்வது போல் நடுவழியில் தனது நாட்டுக்கு திசை திருப்பவும் செய்தார்.மேலும், உலகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமே சீனாதான் என்று பழி போட்டு, அந்நாட்டை பழி தீர்ப்பேன் என தினமும் சபதம் போட்டும் வருகிறார் டிரம்ப்.
ஆனாலும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதால் இப்போது பொருளாதார அளவிலும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்கர்கள் பலரும் வேலை இழந்து தத்தளிக்கின்றனர். இதனால் ஊரடங்கை தளர்த்தி, எங்களுக்கு வேலை கொடு என அமெரிக்கர்கள் பலரும் வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபடவும் தொடங்கியுள்ளனர்.
இப்படி வேலை இல்லாத் திண்டாட்டத்தால் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்றால் அமெரிக்கர்கள் பலரும் வேலை இழந்து தவிக்கின்றனர். நாட்டு மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் பரிதவிப்பதில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. எனவே வெளிநாட்டினருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தும் சட்டம் கொண்டு வரப்படும் என டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெற்றும், H1 விசாவில் தற்காலிக குடியுரிமை பெற்றும் பணிபுரியும் வெளிநாட்டினரில் பெரும் பகுதியினர் இந்தியர்கள் ஆவர். டிரம்ப்பின் தற்போதைய அறிவிப்பால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப் படும் அபாயம் உருவாகியுள்ளது.






