கொரோனா பரிசோதனை : உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய இந்தியா..! அமெரிக்காவை விட 60 மடங்கு குறைவு!!
கொரோனா வைரஸ் அறிகுறியை கண்டறியும் சோதனை நடத்துவதில் உலக அளவில் இந்தியா தான் மிகக் குறைந்த விகிதத்தில் பரிசோதனை நடத்தியுள்ளது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் 28 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில் 130 கோடி கொண்ட இந்தியாவிலோ மொத்தமே 1.89 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது.
உலக நாடுகளை கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று ஒரு வழி பண்ணிவிட்டது என்றே கூறலாம். கண்ணுக்குப் புலப்படாத இந்த ஆட்கொல்லி வைரஸ் பரவும் விதமே வித்தியாசமானது. ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் முன்னரே பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பன்மடங்கு பரவி விடுகிறது. இதனால் பாதிப்பு பன்மடங்கு பெருகும் போது தான் இதன் வீரியமே தெரிய வந்து இப்போது பல நாடுகளும் அலறித் துடிக்கின்றன.
முதலில் சீனாவில் இந்த வைரஸ் பரவும் போதே, இதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை அந்நாடு உணர்ந்ததால் தான், விறுவிறுவென மக்களை முடக்குவது, பரிசோதனைகளை அதிகப்படுத்துவது, நோய்த் தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துவது என அவசர கால யுக்திகளை கையாண்டது. அதில் வெற்றியும் பெற்றது சீனா.

ஆனால் வருமுன் காப்பதில் அலட்சியம் காட்டியதன் விளைவை இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் இப்போது பல மடங்கு மோசமாக அனுபவிக்கின்றன. ஆனாலும், தாமதமான நிலையிலும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் அதிதீவிரம் காட்டத் தொடங்கி விட்டன.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை ஒருபுறம் என்றால் மறுபுறம் வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் சோதனைகளை, லட்சக்கணக்கானோரிடம் அதி தீவிரமாக நடத்தி வருகின்றன. இப்படி அதிகம் பேரிடம் சோதனை நடத்தி, கொரோனா பாதிக்கப்பட்டோரை கண்டறிந்தால் மட்டுமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினால் மட்டுமே, மேலும் விபரீதம் நிகழாமல் தடுக்க முடியும் என்பது நிச்சயமான உண்மையாகிவிட்டது.இதைத் தான் பாதிப்புக்கு ஆளான பல நாடுகளும் இப்போது முனைப்பாக செயல்படுத்தி வருகின்றன.
இன்று இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலும் சரி, உயிரிழப்பிலும் சரி உச்சத்தில் இருப்பது உலகின் மிகப் பெரும் வல்லரசான அமெரிக்கா தான். உலகில் மொத்தமாக கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் 18,53,183 பேர் எனில், இதில் அமெரிக்காவில் பாதிப்பு 5,60,433 ஆகும். இது மொத்த பாதிப்பில் 30% ஆகும். உலகில் மொத்த உயிரிழப்பு 1,14,248 ஆக உள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 22,115 என்ற எண்ணிக்கையில் பலி நிகழ்ந்துள்ளது.

இது மொத்த உயிரிழப்பில் 20% ஆகும். இப்படி பாதிப்பும், உயிரிழப்பும் கூடும் வேளையில்,33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிவேகமெடுத்துள்ளது. உலகிலேயே அதிக பட்சமாக 28,33,112 பேருக்கு பரிசோதனையை அமெரிக்கா நடத்தி முடித்துள்ளது. அதாவது, 10 லட்சம் பேருக்கு 8559 பேருக்கு என்ற விகிதத்தில் பரிசோதனை நடந்துள்ளது.
இதே போன்று, உயிரிழப்பில் அடுத்த இடத்திலுள்ள இத்தாலியில் மொத்த ஜனத்தொகை 6 கோடி மட்டுமே உள்ள நிலையில் 10 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.இது 10 லட்சம் பேருக்கு 16, 708 பேர் என்ற விகிதத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையாகும்.இது போன்று ஸ்பெயினில் 12,833 பேர், பிரான்சில் 5114, ஜெர்மனியில் 15,730 பேருக்கு என பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் தான் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமானாலும், பரிசோதனையை விரைவுபடுத்தினால் மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என அந்நாடுகள் நம்புகின்றன.
ஆனால், 130 கோடி மக்கள் வசிக்கும், உலகில் மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடான இந்தியாவில், கொரோனா பரிசோதனை நடத்தப்படுவதைப் பார்த்தால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மிக சொற்பமாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுமைக்கும் 1,89,111 பேரிடம் மட்டுமே சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 9205 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, உயிரிழப்பு 331 ஆகியுள்ளது.

ஆனால் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வெறுமனே 137 பேர் என்ற விகிதத்தில் அமைந்து உலக நாடுகளிலேயே இப்படி பரிசோதனையில் மிக மிக குறைவான நாடாக இந்தியா திகழ்கிறது. இதுவே அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 60 மடங்குக்கும் மிக மிக குறைவாகும்.
அதே வேளையில், உயிரிழப்பு விகிதம் அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு 67, ஸ்பெயினில் 368, இத்தாலியில் 329/ பிரான்சில் 221, என உள்ள நிலையில் இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 0.2 என்ற விகிதத்தில் மட்டுமே உள்ளது என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது. என்றாலும், இந்திய மக்கள் 130 கோடி பேரில் ஒரு கோடி பேரிடமாவது பரிசோதனை நடத்தினால் மட்டுமே இந்தியாவில் கொரானாவின் உண்மையான பாதிப்பு தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.
அதுவும் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுக்கும் முன்னரே இந்த சோதனையை தீவிரப்படுத்த வேண்டியதும் அவசியம்; இல்லாவிட்டால் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் நாடு தாங்காது என எச்சரிக்கைகளும் விடப்படும் நிலையில், அதிவிரைவு கொரோனா பரிசோதனை என்பது மிக மிக அவசியமாகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.







