ஊரடங்கு காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு கருணையோடு உணவு,பால் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கி வரும் தன்னார்வலர்கள் !!!
நாடு முழுவதும் கொரோனா பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது .
இந்நிலையில் இலையில் உணவை தேடியவர்கள் தேடி இலையில் உணவு எனும் நோக்கத்தில் கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல் உரிமையாளர் சிவகணேஷ் மற்றும் எஸ்.கே.பி இண்டஸ்ட்ரீஸ் பிந்து பாலு ஆகியோர் இணைந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கடந்த 26 ம்தேதி முதல் கோவை நேரு நகர் துவங்கி அவினாசி சாலை,புலிய குளம்,திருச்சி ரோடு,ரேஸ்கோர்ஸ் என வாயில்லா ஜீவன்களான நாய்கள் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று சமைக்கப்பட்ட சாதம்,பால் மற்றும் பிஸ்கட்டுகளை தினமும் நாய்களுக்கு உணவாக வழங்கி வருகின்றனர். கடந்த பதினைந்து நாட்களாக தினமும் இந்த சேவையை இவர்கள் செய்து வருவதால் இவர்களது வாகனம் வந்தவுடன் வாயில்லா ஜீவன்கள் உணவுக்காக ஓடி வருகின்றன.

இதுகுறித்து இச்சேவையை செய்து வரும் தன்னார்வலர் கார்த்திகேயன் கூறுகையில்,
தெருவோர கடைகளில் மீதமாகும் உணவை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த நன்றியுள்ள ஜீவன்கள் இந்த ஊரடங்கு உத்தரவு காலகட்டத்தில் உணவில்லாமல் தவிப்பதை அறிந்து அவைகளுக்கு உணவளித்து வருவதாகவும்,வழக்கமாக கடைகள் , ஓட்டல்கள் இருக்கும் நேரத்தில் பொதுமக்கள் ஏதோ ஒரு வகையில் இந்த நாய்களுக்கு உணவுகள் வழங்குவார்கள்.

ஆனால் , தற்போது கொரோனா பரவி வரும் நிலையில் இது போன்று வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வழங்குவதால் தங்களுக்கும் ஒரு மன நிம்மதி கிடைப்பதாக கனத்த மனதுடன் தெரிவித்தார்.மேலும் , அவர் பத்து கிலோ அளவில் வழங்க துவங்கிய சேவை தற்போது 25 கிலோ வரை உணவு சமைத்து வழங்கி வருவதாக கூறினார்.மேலும், இது போல் பொதுமக்களும் தங்களது வீட்டின் அருகிலுள்ள நன்றியுள்ள ஜீவன்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் வேண்டு கோள் விடுத்தார்.






