தேவையுள்ளோர்க்கு பாஜகவினர் உதவ வேண்டும் : மோடி
பாஜக தொடங்கப்பட்ட நாளையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டிருக்கும் செய்தியில் இந்த இக்கட்டான நேரத்தில் கட்சியினர் அனைவரும் தேவையுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பல ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றியவர்கள் தான் தற்போது நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பை பாஜக பெற்றிருப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பாஜகவிற்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நல்ல நிர்வாகத்திலும், ஏழைகளின் வளர்ச்சிகளையும் அந்த கட்சியின் அரசு கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதே வழியைப் பின்பற்றி கட்சியினர் அனைவரும் பலரது வாழ்வில் மாற்றங்களை கொண்டு வருவதோடு, சமுதாயத்திற்கும் உதவ வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விடுத்திருக்கும் வேண்டுகோளை ஏற்று தனிமனித விலகலை கடைபிடித்து தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்து கொரொனா இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா வெளியிட்ட அறிக்கையில் பாஜகவின் தொண்டர்கள் ஒரு நேர உணவை தவிர்த்து தேவை உள்ளவர்களுக்கு உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார். ஜன சங்கத்தில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சி 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி உருவானது.






