சர்தார் படேல் சிலை விற்பனைக்கு என OLX-ல் விளம்பரம் செய்த குசும்பு ஆசாமி..! குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, நாட்டின் ஒற்றுமையின் சின்னமாக போற்றப்படும் சர்தார் படேலின் சிலையை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த மர்ம ஆசாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

சினிமாவில் தான் நகைச்சுவைக்காக நாட்டின் பொதுச்சொத்தை ஏலம் விடுவது போல் காட்சிகள் இடம் பெறுவதை கண்டுள்ளோம். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் அதுவும் நமது நாட்டின் ஒற்றுமையின் சின்னமாக திகழும் உலகின் மிக உயர சர்தார் படேல் சிலை விற்பனைக்கு என குசும்பு ஆசாமி ஒருவர் விளம்பரம் செய்துள்ளது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நமது நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய தலைவர் களில் முக்கியமானவராக திகழ்ந்தவர் சர்தார் வல்லபாய் படேல். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்ற படேல், ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியதில் அவரின் பங்கு முக்கியமானது. ஹைதராபாத் நிஜாம் உள்பட பல்வேறு சமஸ்தானங்களின் மன்னர்கள், இந்தியாவுடன் இணைய மறுத்த போது இரும்புக் கரம் கொண்டு அடக்குவது போல் அவர்களை பணியச் செய்தவர் படேல், இதனாலேயே அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டு வருகிறார்.

 

குஜராத்தில் பிறந்த படேலின் நினைவைப் போற்றும் வகையில், நர்மதை ஆற்றின் கரையில் அவருக்கு182 மீட்டர் உயர சிலை சிலை எழுப்பப்பட்டு கடந்த 2018-ல் திறக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான சிலை என போற்றப்படும் சர்தார் படேலின் சிலையை உருவாக்க ஆன செலவு 30 ஆயிரம் கோடி ரூபாயாகும். இப்படிப்பட்ட பிரமாண்ட சிலை நாட்டின் ஒற்றுமையின் சின்னமாக அறிவிக்கப்பட்டு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

 

இந்நிலையில் இந்த சிலை ரூ.30 ஆயிரம் கோடிக்கு விற்பனைக்கு உள்ளது என பழைய பொருட்களை ஆன்லைனில் செய்யும்
ஓஎல்எக்ஸ் இணையதள பக்கத்தில் கடந்த சனியன்று விளம்பரம் வெளியானது. கொரோனா பாதிப்பால் நாடு தத்தளிக்கும் நிலையில், போதுமான சிகிச்சைச் சான மருத்துவமனைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்காக இந்த சிலை விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கொடுத்த நபர் யார்? என்பது தெரியாத நிலையில், இப்படி வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஓஎல்எக்ஸ் இணையதளம் பக்கத்தில் அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது.

 

இந்நிலையில், இந்த விளம்பரம் தொடர்பாக குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோசடி, நாட்டின் பொதுச் சொத்தை அபகரிக்க முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விளம்பரத்தை வெளியிட்ட மர்ம ஆசாமி யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply