கொரோனா நிலவரம் : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை..! மம்தா புறக்கணிப்புக்கு காரணம் தெரியுமா?
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிலவரம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இன்றைய ஆலோசனையில் மே.வங்க மாநிலம் சார்பில் பேசுவதற்கு வாய்ப்பில்லாததால் தாம் பங்கேற்கப் போவதில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு 21 நாட்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 9-வது நாளாக தொடர்கிறது . கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அனைத்து மாநில முதல்வர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். கடந்த 3 தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய ஆலோசனையில் கடுமையான மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? அல்லது ஏப்ரல் 14-ந் தேதியுடன் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதா? என்றும் இன்றைய ஆலோசனையில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன், சுகாதாரத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை மற்றும் சுகாதாரத் துறை செயலர்கள் பங்கேற்கின்றனர்.
இன்றைய முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தாம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.கடந்த முறை நடந்த கூட்டத்தில் மே.வங்கம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் தங்கள் மாநில கோரிக்கைகள் குறித்து பேச 3 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டதில் பேசி விட்டேன்.
இன்றைய ஆலோசனையில் வேறு 10 மாநில முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் வெறுமனே பார்வையாளராக பங்கேற்று நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அந்த நேரத்தில் உருப்படியான வேறு பணிகளை பார்க்க முடிவு செய்துள்ளேன். அதற்காக ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அர்த்தமில்லை.மே. வங்க மாநிலம் சார்பில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பர் என்றும் மம்தா தெரிவித்துள்ளார்.






