ரூ.1000 நிவாரண உதவிக்கான டோக்கன் வீடு தேடி வரும்..! ரேசன் கடைகளில் கூட்டம் சேர வேண்டாம்..! அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!!
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக வழங்கப்படும் ரூ.1000 ரொக்கம் மற்றும் ரேசன் பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி, மக்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் நிவாரணமாக ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவசமாக ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிவாரணம் நாளை முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் எனவும், கடைகளில் கூட்டம் சேராமல் இருக்க டோக்கன் வழங்கப்படும் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டோக்கன் வாங்குவதற்காக இன்றே ஏராளமானோர் கடைகள் முன் திரண்டதால் பல இடங்களில் பிரச்னை எழுந்தது. இந்நிலையில், இந்த நிவாரணம் வழங்குவது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளதாவது: நிவாரண உதவி பெறுவதற்கான டோக்கன்கள் அவரவர் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். டோக்கனில் கடையில் எப்போது நிவாரணம் பெறலாம் என்பது பற்றி தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதன்படி அனைவரும் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக மக்கள் பொது வெளியில் கூட்டம் சேர வேண்டாம் என்பதற்காகவே இந்த ஏற்பாடு .எனவே பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






