பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சிக்கு ரூ.8,66,740 ஒதுக்கீடு
பள்ளி மேலாண்மைக் குழு தேர்வு செய்யப்பட்ட 2251 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெற்று வருகிறது.
மறுகட்டமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சி, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதோடு, மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் சிறப்பாகப் பங்கேற்று, பள்ளியின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்குவிப்பது அவசியமாகிறது.
சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுச் செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிகளை அடையாளம் கண்டு, அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தொடர் பயிற்சிகள் வழங்கி, அவர்களின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 2025ஆம் ஆண்டு முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,744 பள்ளிகளில் (குழு A & B) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு நேரடிப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, முதற்கட்டப் பள்ளிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள மேலும் 2,960 பள்ளிகள் இரண்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரு கட்டங்களிலும் மொத்தம் 6,654 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில், பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டமிடல், பள்ளி மேலாண்மைக் குழுத் தீர்மானங்களைச் செயல்படுத்துதல் மற்றும் பள்ளியின் தேவைகளை ஒருங்கிணைந்து நிறைவேற்றுதல் ஆகியவற்றின் மூலம் முன்மாதிரிப் பள்ளிகளாக மேம்படுத்தும் நோக்கில், 102 பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் (SMC Resource Persons) வாயிலாகப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குத் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சியின் ஒருபகுதியாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும், புரிதலையும், ஒத்துழைப்பு கோருவதற்குமான பயிற்சியாக தலைமையாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சியானது 12.11.2026 முதல் 07.12.2026 வரை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயிற்சி சார்ந்த முக்கிய வழிகாட்டுதல்கள்
1. இப்பயிற்சியானது ஒரு நாள் பயிற்சியாக காலை 9:15 மணி முதல் மாலை 4:30 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தெரிவுசெய்யப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனைவரும் பயிற்சி மையத்திற்கு காலை 9:00 மணிக்குள்ளாக வருகை புரிதல் வேண்டும்.
2. மாநில அலுவலகத்திலிருந்து பயிற்சியினை வழங்கச் செல்லும் முதன்மைக் கருத்தாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயணச் செலவினங்களை பயிற்சிகள் முடிந்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாநில அலுவலகத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும்.
3. மாநில அலுவலகப் பயிற்சிக் குழுவினர், பங்கேற்பாளர்களுக்கான பயிற்சி சார்ந்த செலவினங்கள் (உணவு, குடிநீர், சிற்றுண்டி, தேநீர் மற்றும் இதரச் செலவினங்கள்) பயிற்சி நடத்தும் மாவட்ட/மையங்களில் மேற்கொள்ள வேண்டும்.
4. பயிற்சியில் பங்கேற்கும் தலைமையாசிரியர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டும் போக்குவரத்து செலவினங்களை பயிற்சியினை ஒருங்கிணைத்து நடத்தும் மையம் சார்ந்த மாவட்டதில் மேற்கொள்ள வேண்டும்.
5. பயிற்சி நடத்துவதற்குத் தேவையான எழுதுபொருட்கள், சார்ட் பேப்பர்ஸ், நோட்புக், பேனா, கருத்துவளப் புத்தகங்கள் (Resource Materials), புரொஜெக்டர், போர்டு (White Board), White Board Markers, Sketch Pens போதுமான எண்ணிக்கையில் பயிற்சி தொடங்குமுன் பயிற்சி அரங்கில் இருப்பதை பயிற்சி நடத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உறுதிசெய்ய வேண்டும்.
6. பயிற்சி வழங்கும் மாநில பயிற்சியாளர்களுக்கான தங்குமிடம் சார்ந்த செலவினங்களை பயிற்சி நடைபெறும் மாவட்ட/மையங்களில் மேற்கொள்ள வேண்டும்.
7. மாநில அலுவலகத்திலிருந்து பங்கேற்கும் மாநில முதன்மைக் கருத்தாளர்கள் மேற்கொள்ளும் போக்குவரத்துச் செலவினங்களான பயணச் செலவு மற்றும் பயண நேர உணவு செலவினங்களை உரிய பயணப்படி விதிகளின்படி முழு பயிற்சியும் நிறைவடைந்த பிறகு மாநில அலுவலகத்திலிருந்து உரிய ஆவணங்களை சமர்பித்து மேற்கொள்ள வேண்டும்.
8. ஒருநாள் பயிற்சியில் பங்கேற்க தெரிவுசெய்யப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பயிற்சியில் உரிய நேரத்தில் பங்கேற்கவும் மற்றும் மாநில முதன்மைக் கருத்தாளர்கள் (STU) பங்கேற்கவும், பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் பங்கேற்றிடவும் ஏதுவாகப் பணிவிடுப்பு செய்து பயிற்சியில் தவறாது பங்கேற்க அறிவுறுத்திட சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்காண் பயிற்சிக்கான உணவு, தங்குமிடம், பயணப்படி, எழுதுப்பொருட்கள் உள்ளிட்ட பயிற்சி தொகுப்பிற்கான மொத்த உத்தேச செலவினத் தொகை ரூ.8,66,740-ஐ Training of SMC Elementary என்ற தலைப்பின் கீழ் SNA வாயிலாக மாவட்ட அளவில் செலவினங்களை மேற்கொள்ளும் வகையில் விடுவிக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





