ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!!
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் பல நாடுகளும் பீதியில் உறைந்துள்ளன. கடந்த 10 நாட்களில், சுனாமி போல் சுழன்றடிக்கும் கொரோனாவின் கோரப்பசிக்கு, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், பிரான்ஸ், பிரிட்டன்,அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றனர். இதனால் உயிரிழப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பதால், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மனிதர்களை வெளியில் நடமாட விடுவதை கட்டுப்படுத்துவது ஒன்றே இப்போது தீர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே ஊரடங்கு, அவசர நிலை என சட்டங்களைப் போட்டு மக்களை வீடுகளுக்குள் முடங்கக் செய்துள்ளன.மேலும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் தடை உத்தரவை நீட்டித்தும் வருகின்றன.
இந்தியாவிலும் முன்னெச்சரிக்கையாக கடந்த 24 -ந் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசின் ஆட்டமே இனி தான் ஆரம்பமாக உள்ளது என்றும் இதனால் ஊரடங்கு மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்ற செய்திகளை சிலர் பரப்பி வருகின்றனர். இதனால் ஏற்கனவே ஊரடங்கால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்கள் மேலும் பீதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக இவ்வாறு வெளியாகி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை மத்திய அமைச்சரவையின் செயலாளர் ராஜீவ் கவ்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.






