--- --:--:-- --

“கொரோனாவை ஒழிக்க ஒன்றிணைவோம்!!” பகைமை பாராட்ட வேண்டாம்..! டிரம்ப்புடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் சமாதானம்!!

1

கொரோனா வைரசை பரப்பியது நீயா?நானா? என தொடர்ந்து ஒன்றையொன்று குற்றம் சாட்டி வந்த அமெரிக்காவும் சீனாவும் இப்போது சமாதானம் அடைந்துள்ளன.கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலை குலைந்துள்ள அமெரிக்காவுக்கு அதிலிருந்து மீள அனைத்து உதவிகளும் வழங்குவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார்.

 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், பெரும் உயிர்ப்பலியை ஏற்படுத்தி அந் நாட்டையே நிலைகுலையச் செய்தது. 3 மாத காலத்தில் 3250 பேரை சீனாவில் காவு வாங்கியது கொரோனா வைரஸ்.சீனாவில் இந்த வைரஸ் கோரத் தாண்டவமாடிய போது அதனை கட்டுப்படுத்த தன் முழு சக்தியையும் ராணுவ பலத்துடன் எதிர் கொண்டு போராடிய சீனா இப்போது மீண்டு விட்டது.

 

ஆனால், உலக நாடுகளுக்கு மெதுவாக பரவ ஆரம்பித்த இந்த வைரஸ், கடந்த 3 வாரங்களாக ஏறத்தாழ 200 நாடுகளை பீதியில் உறையச் செய்துள்ளது. இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் சீனாவை விட பெருமளவு உயிர்களை பறித்துள்ள இந்த வைரஸ், இப்போது அமெரிக்காவையும் அலறவிட்டுள்ளது. கடந்த நான்கைந்து நாட்களாக அமெரிக்காவில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து, இன்று சீனாவில் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாகி 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அமெரிக்காவில் உயிரிழப்பும் அதிகரித்து 1300 ஐ தாண்டியுள்ளது.

இந்த கொரோனா வைரசை செயற்கையாக உருவாக்கியது சீனாதான் என்று முதலில் அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வந்தது. இந்த வைரசை சீனா வைரஸ் என்றே கூட அமெரிக்க அதிபர் டிரம்ப் உச்சரித்ததும் சர்ச்சையானது. ஆனால் சீனாவோ தம் நாட்டிற்குள் திட்டமிட்டே அமெரிக்கா இந்த வைரசை பரவ விட்டதாக பதிலுக்கு பழி சுமத்தியது. இதனால், இந்த வைரஸ் தாக்குதலுக்கு இடையே இரு நாடுகளிடையே மோதல் வெடிக்கும் சூழல் கூட உருவானது.

 

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அபாய கட்டத்தில் உள்ள நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை திடீரென தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்கத் தேவையான அனைத்து வித உதவிகளையும் சீனா வழங்கத் தயாராக உள்ளதாக டிரம்ப்பிடம் ஜி ஜின்பிங் உறுதியளித்ததுடன், இந்த வைரஸ் தாக்குதலை சமாளிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவோம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

ஜி ஜின்பிங்குடன் உரையாடியது குறித்து டிரம்ப்பும் டுவிட்டரில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் கொரோனா தாக்குதல் பாதிப்பு குறித்து விரிவாக விவாதித்து உருப்படியான யோசனைகளை பகிர்ந்து கொண்டோம். இந்த கொரோனா வைரசை எதிர்கொண்ட அனுபவம் சீனாவுக்கு அதிகமாக உள்ளது. அதனால் நல்ல புரிதலுடன் இரு நாடுகளும் இணைந்து இந்த வைரஸை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளிடையேயான கசப்புணர்வு முடிவுக்கு வந்துள்ளது என்றே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon