கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்தது… !
கொரொனா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் காணொளி காட்சி மூலம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து ஒரு லட்சம் பேரை பாதித்த 67 நாட்கள் ஆனதாக சுட்டிக்காட்டினார்.
பின்னர் அடுத்த ஒரு லட்சம் பேரை பாதிக்க 11 நாட்கள் மட்டுமே ஆனதாகவும், அதன் பின்னர் மூன்றாவது ஒரு லட்சம் பேருக்கு பரவ நான்கு நாட்கள் மட்டுமே ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான நாடுகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு சோதனை நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சந்தேகத்திற்குரிய ஒவ்வொருவரையும் பரிசோதிப்பது மற்றும் தனிமைப்படுத்துவதன் மூலமே கொரொனாவை வெற்றிக் கொள்ள முடியும் என அவர் மீண்டும் தெரிவித்தார்.
இதுவரை எந்த மருந்தும் கொரொனாவுக்கு எதிராக செயலாற்றுவது உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டவர் பரிசோதிக்க படாத மருந்து பயன்படுத்துவது பற்றாக்குறையை ஏற்படுத்தி மற்ற நோய்களுக்கு மருந்தே கிடைக்காமல் செய்யக் கூடும் என்றும் தெரிவித்தார்.






