“நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்!!” செய்தியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய “கிட்” வழங்கிய மு.க.ஸ்டாலின்!!
தலைமைச் செயலகத்தில் செய்தி சேகரிக்கும் அனைத்து செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட மற்றும் ஊடக ஒளிப்பதிவாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய கிட் பெட்டியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
போர் முனையாகட்டும் அல்லது கலவர பூமியாகட்டும் அல்லது அல்லது என நீட்டிக் கொண்டே போகலாம்; அங்கெல்லாம் உயிரை துச்சமாக மதித்து, உணவு, தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கூட இரவு, பகல் பாராது கடமையே கண்ணாக செயலாற்றி தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணி தான் செய்தியாளர்களின் பணி.
தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரானா என்ற கொடிய தொற்றுநோயின் கொடுமைகள் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் செய்தி, ஊடகங்கள் அளப்பரிய பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகின்றன.

நமக்கும் நோய்த் தொற்று வந்து விடுமோ? என்ற அச்சம் ஒரு பக்கம் நிலவினாலும் சமூக அக்கறையுடன் செய்தியாளர்கள் தற்போது விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தான், பிரதமர் மோடியும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், கொரானா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், அரசின் பல்துறை ஊழியர்களுடன், செய்தியாளர்களையும் பட்டியலிட்டு அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து உற்சாகப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இப்படி அளப்பரிய பணியாற்றும் செய்தியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு, திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று உருப்படியான ஒரு காரியம் செய்தது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இன்று சட்டப் பேரவைக்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலகத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கிருமி நாசினி அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய சிறிய பெட்டியை வழங்கி நீங்களும் பத்திரமாக இருங்கள் என வாழ்த்து தெரிவித்தது செய்தியாளர்களை நெகிழச் செய்துவிட்டது என்றே கூறலாம்.







