கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு ரஜினி பாராட்டு…! வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருப்படியான யோசனை!!
கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.அத்துடன் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.
கொரானா வைரஸ் இப்போது இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாகி நாடு முழுமைக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வணிக வளாகங்கள், தியேட்டர்கள், தொழில் நிறுவனங்கள் என பலவற்றையும் மூட உத்தரவிட்டதால் நடுத்தர மற்றும் அன்றாட வருவாய் ஈட்டும் பல்வேறு தொழில் புரிவோர் இந்த கட்டுப்பாடுகளால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச சூழலில் உள்ளனர். இந்நிலையில், கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கையாகதமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசுடன் மக்கள் நாமும் இணைந்து செயல்பட்டு இந்த கொரானா வராமல் தடுக்க வேண்டும்.
மேலும்,இந்த இக்கட்டான சூழ்நிலையில் அடிப்படை ஆதாரம் இழந்து தவிப்போருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கினால் பேருதவியாக இருக்கும் என ரஜினிகாந்த் உருப்படியான யோசனை ஒன்றையும் தெரிவித்துள்ளார். இதே போன்று தாம் அரசியலுக்கு வருவது தொடர்பாக 3 திட்டங்களை அறிவித்த ரஜினி, அதனை மக்களிடம் கொண்டு சென்று எழுச்சியை ஏற்படுத்த தனது மன்ற நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொரானா பீதி ஆட்டிப் படைக்க, அரசியல் பற்றிய பிரச்சாரத்தை ஓரம் கட்டி விட்டு கொரானா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளுமாறும் நேற்று கட்டளையிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.






