என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு…! சட்டசபையில் திமுக வெளிநடப்பு…! தமிமுன் அன்சாரி தர்ணா!!
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்த, அதற்கு ஆளும் கட்சித் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. தமிமுன் அன்சாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப் பேரவை இன்று கூடியவுடன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், என்பிஆர் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், என்பிஆர் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. பாஜக கூட்டணி கட்சிகள் கூட என்பிஆருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனF பீகார் சட்டமன்றத்திலும் என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அது போல் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் என் பிஆர் தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தை வெளியிட வேண்டும் . அந்த கடிதத்திற்கு மத்திய அரசு என்ன பதில் அளித்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை சட்டப்பேரவை தீர்மானம் கட்டுப்படுத்தாது. மக்களை ஏமாற்றும் தவறான தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பவில்லை என பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 16 முதல் ஜுலை 30 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மதத்தினரிடமும் கேட்கப்படும் பொதுவான கேள்விகள்தான் இடம் பெறும். எனவே இது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாத என அமைச்சர் உதயகுமார் பதிலளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனித நேய ஜனநாயகக் கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.





