கொரானோ பீதி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஆபத்து..? 3 மாதத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் ரத்தாகும் அபாயம் !!
சீனாவில் குலை நடுங்கச் செய்துள்ள கொரானோ வைரஸ், அண்டை நாடுகள் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தை 3 மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டால், இந்தாண்டு ஜுலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா என்றால் அது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள்தான். உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. 16 நாட்கள் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே பெரிய கவுரவமாக கருதும் நாடுகளும், வீரர்களும் உள்ளனர்.
அதைவிட, இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளோ அந்த வாய்ப்பை மிகப் பெரும் கவுரவமாக கருதுவதுண்டு. இதனால் இந்தப் போட்டிகளை நடத்த முன்னேறிய பல நாடுகளும் நான், நீ என முட்டி மோதிக் கொள்வதும் உண்டு. இந்தப் போட்டிகளுக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தயாராக வேண்டும் என்பதால் அடுத்த இரு போட்டிகள் நடைபெறும் இடங்கள் முன் கூட்டியே அறிவிக்கப்படுவது வழக்கம்.
தற்போது 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இது பற்றிய அறிவிப்பு 2012 ஒலிம்பிக்கின் போதே முடிவு செய்யப்பட்டது. 2024-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், 2028-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடத்தப்பட உள்ளன.

இந்தாண்டு ஜூலை 24-ந் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக விறுவிறுப்பாக நடந்து, உலகின் முகப் பெரும் விளையாட்டு திருவிழாவை பிரமாண்டமாக நடத்திட ஜப்பான் தயார் நிலையில் உள்ளது. ஆனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா? இல்லையா? என்ற கேள்விக்குறி இப்போது எழுந்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம், உலக வரைபடத்தில் ஜப்பானுக்கு மேலே பரந்து விரிந்துள்ள மிகப் பெரிய நாடான சீனாவை பீதியில் அலறவிட்டுள்ள கொரரனோ வைரஸ் தான். இந்த வைரஸ் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சீனா படாத பாடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் விசுவரூபமெடுக்க, பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. இதனால் உலக நாடுகளிடம் இருந்து சீனா தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பொருளாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது.
இந்த கொரானோ வைரஸ் அரக்களின் கொடிய கைகள் சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மட்டுமின்றி தொலைதூர நாடுகளுக்கும் வேகமாக பரவி பீதியை அதிகரித்து வருகிறது. ஈரான் நாட்டில் கூட கொரானோவுக்கு பலியாகியுள்ளனர். கொரானோ வைரஸ்க்கு இன்னும் உரிய மருந்து, தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் சீனா பெருந் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அந்த நாட்டுக்கு கீழே வால் போல் தொங்கிக் கொண்டிருக்கும் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் இந்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் சிக்கலாகியுள்ளது.

டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி ஒலிம்பிக் நடைபெற உள்ள நிலையில், ஜப்பானிலும் கொரானோ வைரஸ் பீதி கிளம்பியுள்ளது. இதனால் கொரானோ வைரசை வரும் மே மாத இறுதிக்குள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் டிக் பவுன்ட் என்பவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
இதனால் 3 மாத கெடுவுக்குள் கொரானோ கட்டுப்படுத்தப்படுமா? ஒலிம்பிக் நடைபெறுமா? என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் நடைபெற்ற சமயங்களில் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்தான நிலையில், தற்போது கொரானோ எனும் நோய்த் தொற்று வைரசால் ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல் எழுந்துள்ளது தான் பெரும் சோகம்.





